வடமாநிலத்தவர்கள் திரும்பி செல்ல வலியுறுத்தி சென்னையில், 20-ந் தேதி போராட்டம் மணியரசன் பேட்டி

வடமாநிலத்தவர்கள் திரும்பி செல்ல வலியுறுத்தி சென்னையில் வருகிற 20-ந் தேதி போராட்டம் நடத்த உள்ளோம் என்று மணியரசன் கூறினார்.

Update: 2019-12-14 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும் வகையில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழகத்தில் குவிகின்றனர். எனவே தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள்-திரும்பி செல்லுங்கள் என்று வணக்கம் தெரிவித்து வேண்டுகோள் வைக்கும் மனித சுவர் (பொதுமக்கள் அலை, அலையாக திரண்டு சுவர்போல அரண் ஏற்படுத்தி தடுக்கும் போராட்டம்) போராட்டத்தை வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு தமிழ் தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. இந்த போராட்டத்துக்கு பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்.

95 லட்சம் பேர் காத்திருப்பு

தமிழகத்தில் மட்டும் 95 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் நுழைவதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கையாண்டு வருகிறது.

எனவே மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஒத்துழையாமை இயக்கம்

கர்நாடகம், குஜராத் மாநிலங்களைப்போல் மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் மண்ணின் மைந்தர் களுக்கு வேலை வழங்க வேண்டும். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் விதமாக, தமிழகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு நாம் வீடுகளோ, கடைகளை வாடகைக்கு வழங்க கூடாது. வடமாநிலத்தவர்களின் கடைகளில் நாம் பொருட்களை வாங்காமல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட வேண்டும்.வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக வந்து குடியேறுவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்அனுமதி வழங்கும் அதிகாரத்தை தமிழக அரசு பெற வேண்டும். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரிகள் அறிவித்தது போல், தமிழக முதல்-அமைச்சரும் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர் வைகறை, தலைமைக்குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன், நிர்வாகி ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்