தேர்தல் பயிற்சி முகாமை நடத்தியதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் குத்தாலம் அருகே பரபரப்பு

குத்தாலம் அருகே கழிவறை வசதி இல்லாத தேரழந்தூர் கம்பர் கோட்டத்தில் தேர்தல் பயிற்சி முகாமை நடத்தியதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-14 23:00 GMT
குத்தாலம்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதியில் 2 கட்டமாக நடக்கிறது. நாகை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று குத்தாலம் தாலுகா தேரழந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்றது.

மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாமில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், கொள்ளிடம், சீர்காழி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் தேர்தல் பயிற்சி முகாம் அந்தந்த ஒன்றியங்களில் நடத்தப்படாமல் குத்தாலம் தாலுகாவில் சரியான போக்குவரத்து வசதி இல்லாத தேரழந்தூரில் நடைபெற்றதால் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஆசிரிய-ஆசிரியைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். மேலும், பயிற்சி முகாம் நடைபெற்ற கம்பர் கோட்டத்தில் கழிவறை வசதி இல்லாமல் ஆசிரிய-ஆசிரியைகள் மிகுந்த அவதிப்பட்டனர். இதனை கண்டித்து பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஆசிரிய-ஆசிரியைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆசிரியர்கள், நாகை மாவட்டத்தில் உள்ள அந்தந்த தாலுகாக்களில் பயிற்சி முகாமை நடத்தாமல் அலைக்கழிக்கப்பட்டதை கண்டித்தும், கழிவறை வசதிகூட இல்லாமல் அசுத்தமாக காட்சி அளிக்கும் கம்பர் கோட்டத்தில் தேர்தல் பயிற்சி முகாமை நடத்தியதை கண்டித்தும், பயண செலவு அதிகமாக ஆவதாலும், ஆசிரியர்களின் நலன் கருதியும், தேர்தல் பயிற்சி முகாமை அந்தந்த ஒன்றியங்களிலேயே நடத்த வேண்டும் என்றும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்