இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு, ஜனதாதளம்(எஸ்) ஆதரவு அளித்திருக்க வேண்டும் - முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா பேட்டி

இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு அளித்திருக்க வேண்டும் என்று முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-14 22:45 GMT
பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா நேற்று காலையில் சென்றார். அங்கு அவர், சித்தராமையாவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

பின்னர் ஜி.டி.தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தார். சித்தராமையா பூரணமாக குணமடைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். மாநிலத்தில் நடந்து முடிந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை நிறுத்தி இருக்க கூடாது. தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருந்துள்ளது.

அதுபோல, நமது மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை நிறுத்தி இருக்க கூடாது. முதல்-மந்திரி எடியூரப்பா மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதாகவும், நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்றும் கோரி மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டார். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு அளித்திருக்க வேண்டும். கட்சி தலைவர்களிடமும் இதே கருத்தை தான் நான் தெரிவித்திருந்தேன்.

ஏனெனில் பொதுத்தேர்தல் வேறு, இடைத்தேர்தல் வேறு என்பதை ஒவ்வொரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று தனது தலைமையிலான அரசுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளார்.

மாநிலத்தின் வளர்ச்சியையும், நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காகவும் பா.ஜனதாவை மக்கள் ஆதரித்துள்ளனர். அதன்படி, மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதுடன், மக்களின் ஆசைகளையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். மாநிலத்தை வளர்ச்சி பாதையில் முதல்-மந்திரி எடியூரப்பா முன்னெடுத்து செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு ஜி.டி.தேவே கவுடா கூறினார்.

ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.டி.தேவேகவுடா, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா அல்லது காங்கிரசில் சேர இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஜி.டி.தேவேகவுடா பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்