மரத்தில் கார் மோதியதில் திருச்செந்தூர் தொழில் அதிபர் பலி - உறவினர் படுகாயம்

மரத்தில் கார் மோதியதில் திருச்செந்தூர் தொழில் அதிபர் பலியானார். அவருடைய உறவினர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-12-14 23:15 GMT
ஆறுமுகநேரி, 

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிட்டப்பா (வயது 52). தொழில் அதிபரான இவர் திருச்செந்தூரில் பல்வேறு தங்கும் விடுதி, ஓட்டல்கள் நடத்தி வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42). இவர் திருச்செந்தூரில் பேக்கரி நடத்தி வருகிறார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்களுடைய உறவினர் ஒருவர் கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே, அவரை பார்ப்பதற்காக, ராதாகிருஷ்ணன் தனது காரில் கிட்டப்பாவை அழைத்து சென்றார்.

கோவையில் உறவினரை பார்த்து உடல்நலம் விசாரித்த பின்னர், நேற்று முன்தினம் இரவில் அங்கிருந்து ராதாகிருஷ்ணனும், கிட்டப்பாவும் காரில் திருச்செந்தூருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். கிட்டப்பா காரை ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஆத்தூரை அடுத்த முக்காணி அருகே திருச்செந்தூர் சாலையில் இருக்கும் தனியார் செங்கல்சூளை அருகில் கார் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையின் வலதுபுறம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் பலத்த காயம் அடைந்த கிட்டப்பா, ராதாகிருஷ்ணன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். உடனே அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டனர்.

பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே கிட்டப்பா பரிதாபமாக உயிரிழந்தார். ராதாகிருஷ்ணனுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பலியான கிட்டப்பாவுக்கு வசந்தி (45) என்ற மனைவியும், சக்தி (22), கந்தன் (16) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். சக்தி, சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். கந்தன், நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

மேலும் செய்திகள்