ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஒரே நாளில் 1,850 பேர் வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஒரே நாளில் 1,850 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2019-12-14 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 12 பஞ்சாயத்து யூனியனில் உள்ள 174 வார்டு உறுப்பினர்கள், 17 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 403 பஞ்சாயத்து தலைவர்கள், 2 ஆயிரத்து 943 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்டமாக 1,542 பதவிகளுக்கும், 2-வது கட்டமாக 1,995 பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக 3,636 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். 6-வது நாளாக நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 181 பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 306 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,341 பேரும் என மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,850 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதுவரை மொத்தம் 5,486 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். மனுதாக்கல் செய்ய நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

மேலும் செய்திகள்