அரூர் பகுதியில் புதிய வகை போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்

அரூர் பகுதியில் புதிய வகை போதை பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

Update: 2019-12-14 23:00 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வருகின்றனர். அத்துடன் விடுமுறை தினங்களிலும் காலை மாலை நேரங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் விளையாட்டு பயிற்சி செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் இளைஞர் ஒருவர் வி‌‌ஷம் அருந்தியதாக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த இளைஞர் கஞ்சா அல்லது மரக்கட்டைகளை ஒட்ட பயன்படுத்தும் பசை போன்ற பொருளை நுகர்ந்ததால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்த இளைஞருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் விளையாட்டு மைதானத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பெற்றோர் அதிர்ச்சி

அங்கு பிளாஸ்டிக் கவர்களில் பசை போன்ற போதை பொருள் அதிக அளவில் கிடப்பது தெரியவந்தது. போலீசார் பிளாஸ்டிக் கவர்களில் இருந்த பசையை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பழக்கத்திற்கு புதிய வகை பசையை இளைஞர்கள் பயன்படுத்தி வரும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், போதை பழக்கத்திற்கு இது போன்ற பசையை அரூர் பகுதி இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த புதிய வகை போதை பழக்கத்திற்கு ஏராளமான இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். எனவே விளையாட்டு மைதானம், பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இது போன்ற பசை பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்