வேலூர் உள்பட 11 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.12 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

வேலூர் உள்பட 11 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.12 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Update: 2019-12-14 22:15 GMT
வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டு உள்பட திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் உள்பட 11 கோர்ட்டுகளில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. வேலூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான செல்வசுந்தரி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது வேலூர் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சமரச பேச்சுவார்த்தை மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க நீதிபதிகள், வக்கீல்கள் இணைந்து செயல்படுவோம் என்றார்.

மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 7,814 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 2,197 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 16 லட்சத்து 89 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

வேலூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வெற்றிச்செல்வி, குடும்பநல நீதிபதி லதா, முதன்மை தொழிலாளர் நீதிபதி மணிவண்ணன் உள்பட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்