தனியார் தார் கலவை மையத்தை மூடக்கோரி கூடலூர் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தனியார் தார் கலவை மையத்தை மூடக்கோரி கூடலூர் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-12-14 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் அருகே தேவாலா போக்கர் காலனியில் தனியார் தார் கலவை மையம் உள்ளது. இந்த மையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் தார் கலவை மையத்தை மூட வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அனைத்து துறையினரிடமும் முறையாக அனுமதி பெற்று, தனியார் தார் கலவை மையம் செயல்படுவது தெரியவந்தது. ஆனால் தார் கலவை மையத்தால் வீடுகளில் குடியிருக்க முடியாத வகையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தார் கலவை மையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமாக தார் கலவை தயார் செய்யப் படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே அதனை மூடக்கோரி தேவாலா போக்கர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் நேற்று மதியம் 12 மணிக்கு கூடலூருக்கு வந்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் போராட்டம் நடத்த முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தாசில்தார் சங்கீதா ராணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் நடத்தும் முயற்சி கைவிடப்பட்டது.

அதன்பின்னர் கூடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சங்கீதாராணி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் புகார் மனு அளித் தனர். அதில் கூறப்பட்டு உள் ளதாவது:-

தேவாலா போக்கர் காலனியில் செயல்பட்டு வரும் தனியார் தார் கலவை மையத்தில் 22 டன் தார் கலவை மட்டுமே தயார் செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி பல மடங்கு அளவுக்கு தார் கலவை செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் கரும்புகையால் வீடுகளில் நிம்மதியாக வாழ முடிய வில்லை. எனவே எங்களது ரே‌‌ஷன் அட்டை, ஆதார், வாக்காளர் உள்ளிட்ட அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கின்றோம். மேலும் நாங்கள் வாழ வேறு பகுதியில் இடம் ஒதுக்கி தருமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பின்னர் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், நேரில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆதார், வாக்காளர் உள்பட அடையாள அட்டைகளை திருப்பி வழங்குவதாக கூறி அட்டைகளை தாசில்தாரிடம் பொதுமக்கள் வழங்க முயன்றனர்.

அதை வாங்க மறுத்து, உரிய ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சங்கீதாராணி உறுதி அளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்