ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை வழங்காவிட்டால்: மத்திய-மாநில அரசுகள் இடையே மோதல் ஏற்படும் - சிவசேனா சொல்கிறது

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை வழங்காவிட்டால் மத்திய - மாநில அரசுகள் இடையே மோதல் ஏற்படும் என்று சிவசேனா கூறியுள்ளது.

Update: 2019-12-14 22:15 GMT
மும்பை,

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது. இந்த வரி முறையால் மாநில அரசுகளுக்கு ஏற்படுகிற இழப்பை முதல் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடு செய்யும் என்ற உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த இழப்பீடு தொகையை பல மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை.

இது தொடர்பாக சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா' வில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசின் கொள்கைகளே காரணம். ஜி.எஸ்.டி. வரியின் காரணமாக ஏற்படும் இழப்பை சரி செய்ய மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 4 மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. அந்த பணம் மாநிலங்களுக்கு சொந்தமானது. அந்த தொகையை விடுவிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் அது மாநிலங்களின் நிதிநிலைமையை மோசமாக்கி விடும். தங்களுக்கு உரிமையான பங்கை தர மறுத்தால் மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்கள் குரல் எழுப்ப வேண்டும்.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் போன்றவற்றை மத்திய அரசு விற்றுக் கொண்டு இருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு கொடுக்க வேண்டிய ரூ.500 கோடியை கொடுப்பதற்கு மத்திய அரசிடம் பணம் இல்லை. பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு தான் பணம் செலவிடப்படுகிறது. எனவே மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை கிடைப்பது என்பது சந்தேகம் தான்.

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு மதிக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மோதல் உண்டாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்