சிவசேனாவுடன் சமரசம் செய்து கொள்ள தயார்: பா.ஜனதா முன்னாள் மந்திரி திடீர் அறிவிப்பு

மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மாநில அரசில் இருந்து வெளியேறினால் சிவசேனாவுடன் அரசியல் சமரசம் செய்து கொள்ள பாரதீய ஜனதா தயார் என அக்கட்சியின் முன்னாள் மந்திரி ஆஷிஸ் செலார் கூறினார்.

Update: 2019-12-14 23:30 GMT
மும்பை,

குடியுரிமை திருத்த சட்டத்தை மராட்டியத்தில் அமல்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் மந்திரி ஆஷிஸ் செலார் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதினார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்து வாக்களித்த சிவசேனா, மாநிலங்களவையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. மராட்டியத்தில் சிவசேனா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. குடியுரிமை சட்டத்தை மராட்டியத்தில் அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸ் மந்திரி நிதின் ராவத் கூறினார்.

இந்த நிலையில், நாசிக்கில் ஆஷிஸ்செலார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

குடியுரிமை சட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மராட்டியத்தில் சிவசேனா தனது தலைமையிலான அரசாங்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த சிவசேனா தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கூட்டாளிகள் (காங்கிரஸ், தேசியாவத காங்கிரஸ்) எதிர்க்கின்றனர்.

இந்த விவகாரத்தில் அவர்கள் அரசில் இருந்து வெளியேறினால், அந்த சமயத்தில் பாரதீய ஜனதா அதனை சாதகமாக சந்திக்கும். தேவைப்பட்டால் நாங்கள் சிவசேனாவுடன் அரசியல் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறோம். குடியுரிமை திருத்த சட்டம் நாடு மற்றும் மாநிலத்தின் நலனுக்கானது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்