ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி நலவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைப்பு

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்காக ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-12-14 23:36 GMT
ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமானது கோவை மேட்டுப்பாளையும் தேக்கம்பட்டி வனப்பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கி 48 நாட்கள் வரை நடைபெறுகிறது. யானைகள் நலவாழ்வு முகாமுக்காக ராமேசுவரம் கோவில் யானை நேற்று லாரி மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக கோவிலின் 3-ம் பிரகாரத்தின் மையப்பகுதியில் வைத்து காலை 7 மணிக்கு கஜபூஜை நடைபெற்று யானை ராமலட்சுமிக்கு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

இதில் கோவிலின் உதவி ஆணையர் ஜெயா, சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் இருந்து லாரியில் ஏற்றுவதற்காக அக்னி தீர்த்த கடற்கரைக்கு யானை அழைத்து வரப்படும்போது பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் யானை ராமலட்சுமி உற்சாகத்துடன் வேகமாக நடந்து அக்னிதீர்த்த கடற்கரை வந்தது.

அங்கிருந்து சுலபமாக லாரியில் ஏறி நின்றது. காலை 8 மணிக்கு யானை ராமலட்சுமியுடன் லாரியானது கோவில் ரதவீதிகள் சாலை வழியாக புறப்பட்டு சென்றது. முகாமுக்கு யானையுடன் யானை பிரிவு அதிகாரி முனியசாமி, யானை பாகன் ராமு மற்றும் கால்நடை மருத்துவர்களும் உடன் சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-

பீகாரில் இருந்து குட்டி யானையாக ராம்கோ குரூப் ராமசுப்பிரமணியராஜாவால் யானை ராமலட்சுமி ராமேசுவரம் கோவிலுக்கு வாங்கி கொடுக்கப்பட்டது. தற்போது 17 வயதாகும் யானை ராமலட்சுமி, இதுவரை 7 முறை நலவாழ்வு முகாமுக்கு சென்று வந்துள்ளது. தற்போது இந்த ஆண்டு 8-வது முறையாக யானைகள் நலவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்