பழையாறு மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கூட்டத்தில் முடிவு

கொள்ளிடம் அருகே பழையாறு மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2019-12-15 23:00 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. நாகை மாவட்டத்தில் 2-வது சிறந்த துறைமுகமாக பழையாறு மீன்பிடி துறைமுகம் இருந்து வருகிறது. இங்கிருந்து தினமும் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இங்கிருந்து 350 பெரிய மற்றும் சிறிய விசை படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் 79 அடி நீளம் 240 குதிரை திறன் கொண்ட என்ஜின்கள் பொருத்தப்பட்ட படகுகளை மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். 250-க்கு மேல் குதிரை திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட பெரிய விசைப்படகுகளை பயன் படுத்த அனுமதிக்க கூடாது என்று மீனவர்களின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக இரு தரப்பு மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் உரிய தீர்வு ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பு மீனவர்களும் தொடர்ந்து 4 மாத காலமாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் அதிகாரிகளின் திடீர் உத்தரவின் பேரில் கடந்த 15 நாட்களாக சிறிய விசை படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்று வருகின்றனர்.

கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பெரிய விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 140 நாட்களுக்கு மேலாக பெரிய விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வருவாய் இன்றி அவதிப்படுகின்றனர். இதனால் முதல் கட்டமாக நேற்று மீனவர்கள் பழையாறு கிராமத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பெரிய விசை படகுகள் உரிமையாளர்கள் சார்பில் வரதராஜன் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொருளாளர் சங்கர், நிர்வாகிகள் பச்சைகோட்டையன், சக்கரவர்த்தி, பாலகிரு‌‌ஷ்ணன், சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் கடந்த 5 மாதங்களாக பெரிய விசை படகுகளை மீன் பிடிக்க அனுமதிக்காததால் இதனை நம்பி உள்ள 40 குடும்பங்களை சேர்ந்த 100 வாக்காளர்கள் வருகிற 27-ந் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மேலும் இதுகுறித்து பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பது. 5 மாதங்களாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாததால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உடனடியாக உரிய இழப்பீடு வழங்க கேட்டு கொள்வது. நல்ல தீர்வு கிடைக்கும் வரையில் வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி கண்டனத்தை தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்