செஞ்சி அருகே பயங்கரம், கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை - முன்விரோத தகராறில் வாலிபர் வெறிச்செயல்

செஞ்சி அருகே முன்விரோத தகராறில் கழுத்தை அறுத்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-17 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள குறஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் ஜானகிராமன்(வயது 45), விவசாயி. இவருக்கு விமலா(43) என்ற மனைவியும், விக்னே‌‌ஷ்(23), பிரகா‌‌ஷ்(21) என்ற 2 மகன்களும் உள்ளனர். ஜானகிராமன் தனக்கு சொந்தமான வயலில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.

விக்னே‌‌ஷ் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பிரகா‌‌ஷ் திண்டிவனம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஜானகிராமனுக்கும் பக்கத்து வயலை சேர்ந்த கோவிந்தன் மகன் சரவணன்(28) என்பவருக்கும் வரப்பு வெட்டுவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக முன்விரோத தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜானகிராமனுக்கும், சரவணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜானகிராமன் தான் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு படுக்க சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் பிரகா‌‌ஷ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கட்டிலில் ஜானகிராமன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பிரகா‌‌ஷ் இதுபற்றி செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித் தார்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜானகிராமனின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் தனியாக படுத்திருந்த ஜானகிராமனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு சரவணன் தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறை£க உள்ள சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர்.முன்விரோத தகராறில் விவசாயி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்