திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் மோடி, அமித்‌ஷா உருவ பொம்மையை எரித்து மாணவ-மாணவிகள் போராட்டம் - 75 பேர் மீது வழக்கு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் மோடி, அமித்‌ஷா உருவ பொம்மையை எரித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-12-17 22:45 GMT
திருவாரூர்,

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய கோரியும், இதற்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும், திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஊர்வலமாக வந்து ஒரே உருவ பொம்மையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்‌ஷாவின் உருவபடத்தை ஒட்டி வைத்து அந்த உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவடைந்த நிலையில் வருகிற 20-ந் தேதியில் இருந்து ஜனவரி 20-ந் தேதி வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தின் காரணமாக நேற்று முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நெருப்பை கையாண்டது என 143, 341, 285 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நன்னிலம் போலீசார், 30 மாணவிகள் உள்பட 75 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்