வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், பேரையூர் பகுதியில் நிரம்பாத கண்மாய்கள்

வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேரையூர் பகுதியில் கண்மாய்கள் ஏதும் நிரம்ப வில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-12-17 22:30 GMT
பேரையூர்,

பேரையூர் தாலுகா பகுதியில் 350 சிறிய, பெரிய கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளன. 5,050 விவசாய கிணறுகள் உள்ளன. சாகுபடி நிலங்கள் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இப்பகுதி நீர்ப்பாசன வசதி இல்லாத பகுதியாகும். முழுவதும் வானம் பார்த்த பூமியாகும். வருடந்தோறும் 935 மில்லி மீட்டர் மழை பெய்தால் மட்டுமே கண்மாய்கள் நிரம்பி கண்மாய் பாசனம், கிணற்று பாசன விவசாயம் முழுமையாக நடைபெறும்.

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை 370 மி.மீ. பெய்ததால் ஓரளவு மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை இது வரை 365 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை 450 மி.மீ. பெய்ய வேண்டும். இயல்பைவிட வட கிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளதாலும், கடும் வறட்சி காரணமாகவும் இந்த தாலுகா பகுதியில் ஒரு கண்மாய் கூட நிரம்பவில்லை. இதனால் கண்மாய் பாசனம் மூலம் நடைபெறும் நெல் விவசாயம் குறைவான ஏக்கரிலேயே செய்யப்பட்டுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவ மழையால் இந்த தாலுகாவில் உள்ள 40 கண்மாய்களுக்கு 20 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவில் தண்ணீர் வந்துள்ளது. அதுவும் தற்போது வற்றி வருகிறது. மழையால் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் கடலை, வெங்காயம், மா, பூக்கள், காய்கறிகள் விவசாயம் நடைபெறுகிறது. இதிலும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த 10 வருடங்களாகவே போதிய மழை பெய்யாததால் இப்பகுதியில் கண்மாய்கள் நிரம்ப வில்லை. அதன்மூலம் கிணறுகளுக்கும் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் போதிய அளவில் விவசாயம் நடைபெறவில்லை.

இது குறித்து பெருங்காமநல்லூரைச் சேர்ந்த காசிமாயன் என்ற விவசாயி கூறுகையில், “தற்போது வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்ய வில்லை. இதனால் 2-ம் கட்ட விவசாய பணிகளை தொடர வாய்ப்பில்லை. இந்த பகுதியில் தொடர்ந்து பருவமழை ஏமாற்றி வருவதால் ஒரு கண்மாய் கூட நிரம்ப வில்லை. இது எங்களை கவலை அடையச் செய்துள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்