குறைந்த முதலீட்டில் அதிக பணம் தருவதாக கூறி மோசடி; 2 என்ஜினீயர்கள் கைது

குறைந்த முதலீட்டில் அதிக பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-17 22:30 GMT
ஈரோடு, 

ஈரோட்டில் குறைந்த முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சி திட்ட விளம்பரங்களை வெளியிட்டு மோசடி நடப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஈரோடு டவுன் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

விசாரணையில் ஆன்லைனில் பணத்தை செலுத்தினால் அதிகமான பணம் சம்பாதிக்கலாம் என்று பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில், ரூ.1,440 செலுத்தினால் 20 மாதங்களில் ரூ.5 ஆயிரத்து 440 கிடைக்கும் என்றும், ரூ.2 ஆயிரத்து 880 செலுத்தினால் 20 மாதங்களில் ரூ.10 ஆயிரத்து 880 கிடைக்கும் என்றும் அச்சிடப்பட்டு இருந்தது.

இந்த துண்டு பிரசுரங்களை அடித்து வினியோகம் செய்தவர்களை போலீசார் தேடினார்கள்.

அப்போது ஈரோடு அருகே கனகபுரம் தேவஸ்தானபுரத்தை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரபாகரன் (வயது 25), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் பிரவீன்குமார் (25) ஆகியோர் சேர்ந்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்ததும், அவர்கள் 2 பேரும் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்து இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்