அரக்கோணம் வாலிபர் கொலை வழக்கு: பழிக்கு பழியாக கொன்றதாக கைதான 5 பேர் வாக்குமூலம்

அரக்கோணம் வாலிபர் கொலை வழக்கில் கைதான 5 பேர் பழிக்கு பழியாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2019-12-17 22:45 GMT
அரக்கோணம், 

அரக்கோணம், நன்னுமீரான் சாயபு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரவீனை (வயது 24), கடந்த 15-ந் தேதி அரக்கோணம், தூய அந்திரேயர் பள்ளி அருகே 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரவீன் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை நடந்த இடத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பிரவீன் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பிரவீனை அரக்கோணம் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் போலீசார் நேற்று எஸ்.ஆர்.கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த சசிக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் அரக்கோணம், எஸ்.ஆர்.கேட் அருகே உள்ள அரசு பள்ளி பின்புறத்தில் செடி, கொடிகள் அடர்ந்த பகுதியில் பதுங்கி இருந்த அவரது நண்பர்களான அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (19), அஜித்குமார் (22) மற்றும் 17 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. கடந்த 2015-ஆம் ஆண்டு மோகன் என்பவர் அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் பிரவீனை கொலை செய்ததாக அவர்கள் கூறினர்.

கொலை வழக்கில் வேகமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசாரை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்