பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 694 வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கலெக்டர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 694 வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-12-18 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 157 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1,410 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,703 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7,377 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 10,647 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். இந்த தேர்தலில் வாக்குச்சாவடியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 13,595 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 15-ந்தேதி நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களில் பலர் கலந்து கொள்ளவில்லை என்று புகார் எழுந்தது.

ஒழுங்கு நடவடிக்கை

இந்த நிலையில் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மீது தேர்தல் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களில் 694 பேர் கலந்து கொள்ளாதது விசாரணையின்போது தெரியவந்தது.

இதையடுத்து பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மலர்விழி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்