நெல்லையில் பரபரப்பு: ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி சர்வேயர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

நெல்லையில் ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2019-12-18 23:00 GMT
நெல்லை, 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் அல்அமீன் (வயது 30). இவர் நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மண்டல சர்வேயர் அலுவலகத்தில் உதவி சர்வேயராக பணியாற்றி வருகிறார். இங்கு வேலை செய்ததால் நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார்.

நெல்லை பழையபேட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் ஜோசப் (60). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஆகும். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பால்ராஜ் ஜோசப் தற்போது வசித்து வரும் காந்திநகர் வீட்டை சுற்றி 22 சென்ட் இடம் உள்ளது. இதற்கு பட்டா பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறார். கடந்த மாதம் 21-ந் தேதி சர்வேயர் அலுவலகத்திற்கு பால்ராஜ் ஜோசப் வந்தார். அங்கு அல்அமீனை சந்தித்து பேசினார். தற்போது பட்டாக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் தான் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பட்டாபதிவு செய்வதற்கு என்னுடைய கையெழுத்து கண்டிப்பாக வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் பட்டா பதிவு செய்ய முடியும் என்றார். மேலும் கையெழுத்து போடுவதற்கு எனக்கு ரூ.15 ஆயிரம் தர வேண்டும் என்று பால்ராஜ் ஜோசப்பிடம் அல்அமீன் கூறினார். நான் ஓய்வு பெற்று விட்டேன். இதனால் என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறி ரூ.12 ஆயிரம் தருவதாக பால்ராஜ் ஜோசப் ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. இதனால் அவர் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு எஸ்காலிடம் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பால்ராஜ் ஜோசப், அல்அமீனை மீண்டும் சந்தித்து பேசினார். தொடர்ந்து காந்திநகருக்கு சென்று நிலத்தை அல்அமீன் அளந்து பார்த்து உள்ளார். பின்னர் அவரது பட்டாவில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். ஆனால் பணத்தை மறுநாள் தருவதாக பால்ராஜ் ஜோசப் கூறினார்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பால்ராஜ் ஜோசப்பிடம் ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலையில் சர்வேயர் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அல்அமீன் இல்லை. அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, நெல்லை தாலுகா அலுவலகத்திற்கு வரும்படி தெரிவித்தார். அதன்படி பால்ராஜ் ஜோசப் அங்கு சென்றனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு எ‌‌ஸ்கால், இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆசீர் மற்றும் போலீசாரும் அங்கு சென்று பதுங்கி இருந்தனர்.

பால்ராஜ் ஜோசப் பணத்தை அல்அமீனிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். மாலை 6 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9.30 மணிவரை நீடித்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கோடீஸ்வரன் நகரில் உள்ள அல்அமீன் வீட்டில் சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். லஞ்சம் வாங்கிய உதவி சர்வேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்