செய்யாறு அருகே, தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது

செய்யாறு அருகே தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-19 21:30 GMT
செய்யாறு,

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். அவருடைய மனைவி சுமதி. இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி கணவன் - மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் சிலர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா விளாநல்லூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினர்.

செங்காடு அருகில் உள்ள அம்மாபாளையம் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென காரை மறித்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். பின்னர் சுமதி அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து முருகன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள் செய்யாறு தாலுகா கீழ்மட்டை கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் (வயது 32) என்பவருக்கு சொந்தமான என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விவேகானந்தனை பிடித்து விசாரித்ததில், காரில் வந்தவர்களை தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டதும், மேலும் அவருடைய நண்பர்கள் துரை (36), ரமேஷ் (37) மற்றும் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் விவேகானந்தன், துரை, ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்