உயிருக்கு போராடி வரும் காட்டுயானைக்கு தீவிர சிகிச்சை; வனத்துறை அதிகாரி தகவல்

சோமவார்பேட்டை அருகே, உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் காட்டுயானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-12-19 22:30 GMT
குடகு, 

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா வால்னூரு அருகே தேகத்தூரு கிராமத்தில் வசித்து வருபவர் சன்னப்பா. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக காபித்தோட்டம் உள்ளது. நேற்று காலையில் அவர் அந்த காபித்தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு ஒரு காட்டுயானை மயங்கிய நிலையில் கிடந்தது. மேலும் அது எழுந்திருக்க முடியாமல், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

அதைப்பார்த்த சன்னப்பா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வனத்துறையினர், கால்நடை டாக்டர் முஜீப் என்பவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கால்நடை டாக்டர் முஜீப், அந்த காட்டுயானைக்கு சிகிச்சை அளித்தார். அவருக்கு தேவையான உதவிகளை வனத்துறையினரும், அப்பகுதி பொதுமக்களும் செய்து கொடுத்தனர். இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த காட்டுயானை பெண் யானையாகும். இதற்கு 35 வயது இருக்கும். இந்த யானைக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. அது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. அந்த காயம் காரணமாக இந்த யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாகவே இந்த காட்டுயானை, இங்கு வந்து காபித்தோட்டத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறது.

ஆனால் யாரும் இதை பார்க்கவில்லை என்று தெரிகிறது. தற்போது அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது குணமடையும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்