அரசு பள்ளிக்கு சொந்த கட்டிடம் இல்லாத அவலம்: குடியிருப்பில், குறுகலான அறையில் படிக்கும் மாணவர்கள்

ஒரத்தநாட்டில் அரசு பள்ளிக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் அருகே உள்ள குடியிருப்பில் மாணவர்கள் குறுகலான அறையில் படித்து வருகிறார்கள். எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-19 22:45 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அண்ணாசிலை அருகில் முத்தாம்பாள்சத்திரத்துக்கு உட்பட்ட ஓட்டு கட்டிடத்தில் ஒரத்தநாடு மையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக ஒரத்தநாடு அண்ணாநகரில் உள்ள வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு குறுகலான வீட்டில் சுமார் 35 மாணவர்கள் சிரமத்துடன் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கு 2 ஆசிரியைகள் பாடம் கற்பித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் மாணவர்கள் தற்போது பயின்றுவரும் வீடு மிகவும் குறுகலாகவும், காற்றோட்டம் இல்லாமலும் உள்ளது. மாணவர்கள் படிக்கும் இந்த இடம் அமைதியின்றி இரைச்சலுடன் உள்ளது. இதனால் மாணவர்களும் ஆசிரியைகளும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

புதிய கட்டிடம் கட்டப்படுமா?

இந்த பள்ளிக்கு போதிய வசதிகளுடன் கூடிய சொந்த பள்ளி கட்டிடம் இல்லாததால் மக்கள் இப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல், தூரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறார்கள். எனவே ஒரத்தநாடு மையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய சொந்த கட்டிடம் கட்டித்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்