கன்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி - நண்பர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-12-21 22:45 GMT
திருவொற்றியூர்,

சென்னை தண்டையார்பேட்டை கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளராக உள்ளார். இவருடைய மகன் கோகுல் (வயது 18). இவர், கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. எல்.எல்.பி. படித்து வந்தார்.

இவர், தன்னுடைய நண்பரான யோகபிரகாஷ் என்பவருடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராயபுரத்தில் உள்ள தங்களது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு எண்ணூர் விரைவு சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை யோகபிரகாஷ் ஓட்டினார். அவருக்கு பின்னால் கோகுல் அமர்ந்து இருந்தார். திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே சென்றபோது, இவர்களுக்கு பின்னால் இருந்து வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த கோகுல், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

அவருடைய நண்பரான யோகபிரகாஷ் கை, கால் உடைந்த நிலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார், யோகபிரகாசை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் பலியான மாணவர் கோகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த மகேந்திரன் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்