நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.15½ லட்சம் அபராதம் வசூல்

நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-12-21 22:00 GMT
நெல்லை, 

ஒருமுறை பயன்படுத்திய பின்னர் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது, சேமிப்பது, வினியோகிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியன தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக கடந்த 1.10.2019 முதல் நெல்லை மாநகராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும், அதை கண்காணிக்கும் விதமாகவும் மாநகராட்சி பணியாளர்களால் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்படுவதுடன், உபயோகிப்பாளர் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1.1.2019 முதல் நேற்று முன்தினம் வரை 13 ஆயிரத்து 984 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 4,777 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.15 லட்சத்து 47 ஆயிரத்து 350 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக் கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்த உரிமையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும், பிளாஸ்டிக் உபயோகத்தினை தவிர்ப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்