முத்தையாபுரம் சூசைநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் முத்தையாபுரம் சூசைநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

Update: 2019-12-21 22:00 GMT
ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சூசைநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, கடந்த மாதம் பெய்த மழையால் சூசைநகர் குடியிருப்பு பகுதியை தண்ணீர் சூழ்ந்தது. நேற்று பெய்த மழையால் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

எங்கள் பகுதியில் சரியாக வடிகால் வசதி இல்லை. இதனால் இங்கு தேங்கும் தண்ணீர் கடலில் கலப்பதற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதை நிரந்தரமாக தடுக்க உடனடியாக வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து சூசைநகர் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதில் திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் சவேரியார் தெருவைச் சேர்ந்த போரிஸ் பீறிஸ் என்பவரது குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர். மழையில் சேதம் அடைந்த வீட்டை வருவாய் துறையினர் பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தனர்.

மேலும் செய்திகள்