உளுந்தூர்பேட்டை அருகே, ஆம்னி பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் பலி - 40 பயணிகள் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், வாலிபர் பலியானார், 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-12-21 23:00 GMT
உளுந்தூர்பேட்டை, 

சென்னை-திருச்சி மார்க்கமாக வரும் வாகனங்கள், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து உளுந்தூர்பேட்டை நகருக்குள் செல்வதற்காக நான்குவழிச்சாலையில் இருந்து வலதுபுறமாக திரும்பும் போது, எதிர்புறமாக வரும் வாகனங்களை கவனிக்காமல் திரும்புவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அப்பகுதியில் நடந்த விபத்துக்களில் 30-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் அதே இடத்தில் நேற்று அதிகாலையில் ஒரு விபத்து நடந்தது. அதன் விவரம் வருமாறு:-

சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. அந்த ஆம்னி பஸ்சில் 40-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். நேற்று அதிகாலையில் அந்த ஆம்னி பஸ் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாண்டி உளுந்தூர்பேட்டை நகரத்துக்குள் செல்வதற்காக நான்குவழிச்சாலையில் வலது பக்கம் திரும்பியது. அப்போது, திருச்சி-சென்னை மார்க்கத்தில் கேரளாவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மற்றொரு ஆம்னிபஸ் வந்து கொண்டு இருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் இரு ஆம்னி பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு ஆம்னி பஸ்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் இரு பஸ்களில் இருந்த பயணிகளும் காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்சுகள் விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தன. பின்னர் அவர்களில் பலரை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் ஒரு வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இந்த விபத்தில் மிதுன்(வயது21), திலகம்(63), ராஜ்குமார்(32), வெங்கடே‌‌ஷ்(50), சுரே‌‌ஷ்பவா(64), அவரது மனைவி நிலாபவா, பத்மாவதி(50), பாஸ்கர்(49), ரமே‌‌ஷ்(53), செல்வத்திரு(34) உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்தால் சம்பவ இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்து நடந்த இதேபகுதியில் இதுவரை நடந்த விபத்துக்களில் 30-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதால், சேந்தநாடு குறுக்குசாலையை ஒருவழிப்பாதையாக அறிவித்து, உளுந்தூர்பேட்டை நகருக்குள் செல்லும் வாகனங்கள், சென்னை-திருச்சி சாலையில் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள ரவுண்டானா வழியாக செல்ல காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.

மேலும் செய்திகள்