‘வீட்டை விற்க முடியாது என்று கூறியதால் தந்தையை கொன்றேன்’ கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்

வீட்டை விற்க முடியாது என்று கூறியதால் தந்தையை கொலை செய்தேன் என்று கைதான மகன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2019-12-22 22:15 GMT
சேலம்,

சேலம் அம்மாபேட்டை நதிமூலம் மக்கான் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகன்கள் சீனிவாசன்(32), ரஞ்சித்குமார், அருண். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் சீனிவாசன் மெக்கானிக் ஆவார்.

அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், கணவரை விட்டு பிரிந்து ஜெயந்தி தனியாக வசித்து வருகிறார். இவரை ரஞ்சித்குமார், அருண் ஆகியோர் பராமரித்து வருகின்றனர். சீனிவாசன் ராமசாமியை பராமரித்து வந்தார். இந்த நிலையில் சீனிவாசனின் மனைவி அவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதனால் சீனிவாசன் குடித்துவிட்டு தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் தந்தை ராமசாமியை கொலை செய்தார்.

வாக்குமூலம்

இதையொட்டி அம்மாபேட்டை போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். தந்தையை கொலை செய்தது குறித்து சீனிவாசன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ராமசாமி தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அதை 3 மகன்களுக்கும் கொடுத்து உள்ளார். அவர் வசித்து வந்த ஒரு வீடு மட்டும் அவரது பெயரில் உள்ளது. இந்த நிலையில் ராமசாமி குடியிருந்த 400 சதுர அடி அளவுள்ள வீட்டை விற்று பணம் தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் இரவு சீனிவாசன், தந்தையிடம் அவர் குடியிருந்து வந்த வீட்டை விற்று அந்த பணத்தை தனக்கு தருமாறு கேட்டு தகாறில் ஈடுபட்டு உள்ளார். அதற்கு ராமசாமி வீட்டை விற்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், தந்தை ராமசாமியை உளியால் தாக்கி கொலை செய்து உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்