நெல்லையில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - ஒருவர் சிக்கினார்; 3 பேருக்கு வலைவீச்சு

நெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-12-23 00:00 GMT
பேட்டை, 

நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கண்டியப்பேரியை சேர்ந்தவர் சகாதேவன். விவசாயி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். அவர்களில் 2-வது மகன் இசக்கிமுத்து என்ற கணேச பாண்டியன் (வயது 26).

இவர் நேற்று காலை பழைய பேட்டை பகுதியில் அம்மன் கோவில் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிக்கச் சென்றார். அப்போது அம்மன் கோவிலின் அருகே 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இசக்கிமுத்து வருவதை பார்த்ததும், அவர்கள் ஓடி வந்து அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து சுதாரித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். ஆனால் அவர்கள் இசக்கிமுத்துவை ஓட ஓட விரட்டிச்சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழையபேட்டை வாகன சோதனை சாவடியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். அப்போது அங்கு நின்ற 4 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர். சம்பவ இடத்துக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌‌ஷனர் சரவணன், நெல்லை டவுன் உதவி கமி‌‌ஷனர் சதீ‌‌ஷ், பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த நவீன் (19) என்பதும், தப்பி ஓடியவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்த துரைமுத்து, நெல்லை மாவட்டம் மேலச்செவலை சேர்ந்த லட்சுமி காந்தன், தாழையூத்தை சேர்ந்த சுபா‌‌ஷ் என்பதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், ஸ்ரீவைகுண்டத்தில் கண்ணன் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இசக்கிமுத்து சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே பழிக்குப்பழியாக இசக்கிமுத்துவை கொலை செய்ய கண்ணனின் அண்ணன் துரைமுத்து பல நாட்களாக திட்டம் தீட்டி வந்துள்ளார். இதற்காக இசக்கிமுத்துவின் நடமாட்டத்தை துரைமுத்து உள்ளிட்டோர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இசக்கிமுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்து உள்ளது.

இதுதொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர், தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்