நாகர்கோவில் அருகே துணிகரம் அம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நாகர்கோவில் அருகே அம்மன் கோவிலில் நகை- பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-23 23:00 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த குஞ்சன்விளையில் குமிழிமூடு பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இங்கு பேச்சி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக் கிழமை தோறும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை பூசாரி கண்ணன் பூஜைகளை முடித்துவிட்டு பூட்டிவிட்டு சென்றார். இந்தநிலையில், நேற்று காலை 7 மணி அளவில் ஒரு தம்பதி சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தனர். அப்போது அந்த கோவிலில் உள்ள பேச்சியம்மன் சன்னதியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றிய தகவல் பரவியதும் அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

கொள்ளை

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பேச்சியம்மன் சன்னதியில் டிராயரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2 ஜோடி வெள்ளி கொலுசுகள், வெள்ளி காப்புகள் ஆகியவற்றை டிராயரோடு மர்ம நபர்கள் தூக்கி சென்று இருந்தது தெரியவந்தது.

மேலும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அம்மன் கோவிலில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்