காட்டுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தச்சென்ற வனக்காப்பாளரை யானை மிதித்து கொன்றது

காட்டுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தச்சென்ற வனக்காப்பாளரை யானை மிதித்து கொன்றது.

Update: 2019-12-23 22:15 GMT
பவானிசாகர்,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள முடுதுறையை சேர்ந்தவர் கிட்டான். இவருடைய மகன் மகேந்திரன் (வயது 48). இவர் பவானிசாகர் வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் மகேந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட போலி பள்ளம் என்ற இடத்தில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்தச் சென்றார்கள்.

அப்போது புதருக்குள் இருந்து ஒரு யானை சத்தமாக பிளிறியபடி 3 பேரையும் நோக்கி ஓடி வந்தது. இதனால் 3 பேரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடினார்கள்.

ஆனால் விடாமல் துரத்திவந்த யானை மகேந்திரனை துதிக்கையால் பிடித்து தூக்கிப்போட்டு காலால் மிதித்தது. இதனால் அலறியபடி அந்த இடத்திலேயே மகேந்திரன் உயிரிழந்தார். பின்னர் யானை அங்கிருந்து சென்றுவிட்டது.

அதைத்தொடர்ந்து சற்று தூரத்தில் புதரில் ஒளிந்திருந்த கிருஷ்ணமூர்த்தியும் ரமேசும் அங்கு வந்து பார்த்தார்கள். மகேந்திரன் பிணமாக கிடப்பதை பார்த்து அவர்கள் கண்ணீர் சிந்தினார்கள்.

பின்னர் இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், பவானிசாகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார்கள்.

பின்னர் மகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யானை மிதித்து கொன்ற மகேந்திரனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும் கவின்குமார், பிரவீன் குமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் மகேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்