சென்னையில் பைக் ரேஸ்; 158 வாலிபர்கள் கைது - முகமூடி அணிந்து சென்ற இளம்பெண்ணும் சிக்கினார்

சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்ட 158 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் முகமூடி அணிந்தபடி மொபட் ஓட்டிச் சென்ற இளம்பெண்ணும் சிக்கினார்.

Update: 2019-12-25 23:00 GMT
சென்னை, 

சென்னை காமராஜர் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா மேம்பாலம், ஜி.எஸ்.டி. சாலை, சர்தார் பட்டேல் சாலை ஆகிய சாலைகளில் நேற்றுமுன்தினம் இரவு ஏராளமான இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அவர்களை மடக்கி பிடித்து கைது செய்ய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் எழிலரசன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் மேற்கண்ட சாலைகளில் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து போலீசாருக்கு துணையாக, சட்டம்-ஒழுங்கு போலீசாரும் நடவடிக்கையில் இறங்கினார்கள். குறிப்பிட்ட சாலைகளில் வாகன சோதனையும் நடத்தப்பட்டன.

அப்போது அந்த சாலைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி ரேசில் ஈடுபட்ட 158 வாலிபர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் 126 பேர் மீது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றதாக 2 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மீதமுள்ள 32 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கைதானவர்களில் பெரும்பாலானோர் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். இவர்களுடன் முகமூடி அணிந்து கொண்டு அதிவேகமாக மொபட் ஓட்டிச் சென்ற இளம்பெண் ஒருவரும் போலீசில் சிக்கினார்.

தொடர்ந்து இதுபோல் புத்தாண்டு தினம் வரை வாகன சோதனை நடத்தி பந்தயம் கட்டி பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்