விவசாயி கொலை: மனைவிக்கு தொல்லை கொடுத்ததால் கொன்றேன் கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம்

கெங்கவல்லி அருகே விவசாயி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய உறவினர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மனைவிக்கு தொல்லை கொடுத்ததால் மண்வெட்டியால் தலையில் தாக்கி கொன்றேன் என கூறியுள்ளார்.

Update: 2019-12-25 23:00 GMT
கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமர் (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சாந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். ராமருக்கு சொந்தமான நிலம் ஏரிக்கரை குறவன் காலனியில் உள்ளது.

ராமரின் சித்தப்பா மகன் கலியமூர்த்தி (35). இவருடைய மனைவி கனகா (30).

கொலை

விவசாயி ராமர், கலியமூர்த்தியின் மனைவி கனகாவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராமர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

நேற்று முன்தினம் காலையில் ராமர் வீடு திரும்பாததால் தோட்டத்து வீட்டுக்கு சென்று ராமரின் உறவினர்கள் பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராமரின் தம்பி மனைவி மஞ்சுளா கெங்கவல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி உறவினர் கலியமூர்த்தியை கைது செய்தனர்.

வாக்குமூலம்

கைதான கலியமூர்த்தி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் ராமருக்கும் இரண்டு ஆண்டுகளாக விவசாய தோட்டத்தில் வரப்பு தகராறு இருந்து வந்தது. இதனால் நாங்கள் பேசாமல் இருந்தோம். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராமர் என்னுடைய மனைவி கனகாவுக்கு தொல்லை கொடுத்தார்.

இதுபற்றி என் மனைவி என்னிடம் வந்து கூறினார். இதையடுத்து நான் என்னுடைய உறவினர்களையும், ராமரையும் அழைத்து பேசினோம். அப்போது என் மனைவிக்கு இனிமேல் தொல்லை கொடுக்கக்கூடாது என்று ராமரிடம் கூறினோம். இதன்பின்னர் கடந்த 22-ந்தேதி விவசாய தோட்டத்தில் வேலை செய்த கனகாவுக்கு ராமர் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார்.

சத்தியம்

இதனால் 23-ந்தேதி மீண்டும் உறவினர்களையும், ராமரையும் அழைத்து பேசினோம். அப்போது ராமரை கோவிலில் சத்தியம் செய்யுமாறு கூறினோம். அதன்பின்னர் அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டோம். ஆனால் நான் ராமரை பின்தொடர்ந்து சென்றேன். அப்போது கையில் வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து ராமரின் பின்பக்க தலையில் அடித்தேன். இதனால் ராமர் மயங்கி விழுந்து விட்டார். அங்கிருந்து நான் வீட்டுக்கு வந்தேன்.

ஆனாலும் அவரை தாக்கியது பற்றியே நினைத்து கொண்டிருந்தேன். அவர் உயிரோடு இருந்தால் என்னை அவர் கொலை செய்து விடுவார் என்று நினைத்து மீண்டும் விவசாய தோட்டத்துக்கு சென்று பார்த்தேன். அங்கு ராமர் மயங்கிய நிலையில் இருந்தார். அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து மீண்டும் அவருடைய தலையில் அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார்.

மின்சாரம் தாக்கி அவர் இறந்ததுபோல் நாடகம் ஆடவேண்டும் என்று கருதினேன். எனவே அருகில் மின்மோட்டாருக்கு செல்லும் வயரை எடுத்து அவருடைய கையை அழுத்தி பிடிப்பதுபோல் வைத்து விட்டு மின்சார சுவிட்சை போட்டு விட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு கலியமூர்த்தி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து கலியமூர்த்திக்கு உதவியதாக கனகாவின் தந்தை ராமன் (60), கனகா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரையும் ஆத்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்