உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு பேனர் வைத்ததால் பரபரப்பு

கிரு‌‌ஷ்ணகிரி அருகே அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து கிராம மக்கள் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-25 23:00 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி அருகே உள்ளது பெத்ததாளப்பள்ளி 7-வது வார்டு இந்திரா நகர். இப்பகுதியில் 73 வீடுகள் உள்ளன. இங்கு 62 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளின் முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது. மேலும், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல சாலை வசதியும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகள், சீரான குடிநீர் வினியோகம் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

தேர்தல் புறக்கணிப்பு

இந்தநிலையில் இந்திரா நகரில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அப்பகுதி மக்கள் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து பேனர் வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் என எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதன் காரணமாக கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம்.

இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதன்பின்னரும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிட்டால் அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து பொதுமக்கள் பேனர் வைத்துள்ள சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்