ஆத்தூரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஆத்தூரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-12-26 22:15 GMT
ஆத்தூர்,

ஆத்தூர் தெற்கு உடையார்பாளையத்தில் சேலம்-கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வருபவர் பாலசுப்பிரமணியம். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த ரூ.800-யை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

அதேபோல இவரது கடைக்கு அருகே டீக்கடை நடத்தி வருபவர் சிலம்பரசன். இவரது கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.1,500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர். இந்த கடைக்கு அருகே மருந்து கடை நடத்தி வருபவர் சையது முஸ்தபா. இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் ரூ.8 ஆயிரத்தை திருடி சென்றனர்.

வலைவீச்சு

இதுகுறித்து 3 கடைக்காரர்களும் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் விரைந்துசென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆத்தூரில் ஒரே நாளில் அடுத்தடுத்த 3 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்