கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்தவர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

மதுக்கூர் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தவர், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2019-12-28 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் மதுரபாசாணிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். கட்டிட தொழிலாளியான இவர், 10-வது வார்டில் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இறுதி வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் ஆனந்த், கலெக்டர் கோவிந்தராவை நேரில் சந்தித்து வேட்பாளர் பட்டியலில் தனது பெயரையும், சின்னத்தையும் காணவில்லை என புகார் மனு அளித்தார்.

அதில், “எனது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. சின்னமும் ஒதுக்கப்படவில்லை. நான் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. வேட்புமனு பரிசீலனை, வாபஸ் பெறும் நாளில் நான் ஊரிலேயே இல்லை, இதற்கு காரணமாக தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டிருந்தது.

கோபுரத்தில் ஏறிபோராட்டம்

ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள், மதுக்கூர் தேர்தல் அதிகாரியிடம் சென்று தெரிவியுங்கள் என கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். நகருக்கு வந்தார். அங்கிருந்த ஒரு வீட்டின் மாடிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டு இருந்த 60 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து இறங்கி வருமாறு கூறினர்.

கைது

இதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தை இறங்கி வருமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் உங்கள் கோரிக்கையை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அவர் இறங்கி வரவில்லை.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், ஆனந்துடன் செல்போனில் பேசினார் அவரை கீழே இறங்கி வருமாறு அழைத்தார். அதன்படி 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஆனந்த் கீழே இறங்கி வந்தார்.

இதையடுத்து ஆனந்தை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.


மேலும் செய்திகள்