தொடர் விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2019-12-28 23:00 GMT
மாமல்லபுரம்,

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

முக்கிய புராதன சின்ன பகுதிகளில் பயணிகள் கூட்டம் களை கட்டியது. காலை 8 மணி முதல் அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம், கூட்டமாக பயணிகள் வருகை தந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்ததாலும், போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததாலும் சாலை ஓரத்திலேயே சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், கடற்கரை சாலை, ஐந்துரதம், கிழக்கு ராஜ வீதி, மேற்குராஜவீதி உள்ளிட்ட சாலையில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாமல்லபுரம்-கோவளம் சாலையில் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக மெதுவாக நகருக்குள் ஊர்ந்து சென்றன. கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதிகளை அடைய 1 மணி நேரத்திற்கும் மேல் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.

வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம், கடற்கரை கோவில் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட தொல்லியில் துறையின் நுழைவு கட்டண மையங்களில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து ரூ.40 செலுத்தி நுழைவு சீட்டு வாங்கி சென்றனர். அதிக அளவு சுற்றுலா பயணிகள் திரண்டதால் நுழைவு சீட்டு மையங்களில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

பாதுகாப்பிற்காக மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மாமல்லபுரம் நகரில் புராதன பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகள் கூட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்