கிணத்துக்கடவு அருகே, கடன்தொல்லையால், அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - மனைவிக்கு தீவிர சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே கடன்தொல்லை காரணமாக அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

Update: 2019-12-28 22:45 GMT
கிணத்துக்கடவு, 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கோவில்பாளையம் காளி யண்ணன்புதூரை சேர்ந்தவர் கமல்ராஜா (வயது 36). இவர் பொள்ளாச்சி கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய மனைவி ஜமுனாராணி (30). இவர்களுடைய மகன் விக்னேஷ் (12) அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பும், மகள் கோகிலா (9) 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கமல்ராஜா குடும்ப செலவுக்காக சில பேரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால் அவரால் பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் மனஉளைச்ச லில் இருந்து வந்துள்ளார். இது பற்றி அவர், தனது மனைவியிடமும் கூறி வருத்தப்பட்டு உள்ளார். மேலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்வது குறித்து கமல்ராஜா தனது மனைவியிடம் கூறி உள்ளார். அதற்கு அவரும் சம்மதித்ததாக தெரிகிறது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு குழந்தைகள் 2 பேரையும் தூங்க வைத்து விட்டு கமல்ராஜாவும், ஜமுனாராணியும் விஷம் குடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கமல்ராஜா மயங்கி விழுந்தார். அதை பார்த்த ஜமுனா ராணி விஷம் குடித்த நிலையிலும் மெதுவாக நடந்து சென்று, பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது பெரியம்மாவிடம் விஷம் குடித்து விட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஒன்று சேர்ந்து, கமல்ராஜா மற்றும் ஜமுனாராணியை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கமல்ராஜா பரிதாபமாக இறந்தார்.

ஜமுனாராணிக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்