தஞ்சையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணிஆணை வழங்குவதில் குழப்பம்

தஞ்சையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்குவதில் குழப்பம் நிலவியது. இதனால் அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-29 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக 1,390 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, திருவோணம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 11,356 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சுழற்சி முறையில் வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டன. தஞ்சை ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள 349 வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணி ஆணை தஞ்சையில் உள்ள தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை வழங்கப்பட்டன.

அலுவலர்களிடையே குழப்பம்

இதற்கான தகவல் நேற்று வாக்குச்சாவடி அலுவலர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டது. அதன்படி கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் தஞ்சை பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பணி ஆணை பெறுவதற்காக காலை 8 மணிக்கு தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு வந்தனர்.

ஆனால் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையத்திற்கான, பணி ஆணை வாங்குமிடத்தை முறையாக அறிவிக்காமலும், பள்ளி வளாகத்தில் அதற்கென்று உரிய தகவல் தெரிவிக்காததால், காலையிலிருந்து மதியம் 12 மணி வரை ஆசிரியர்கள் அலைந்து கொண்டிருந்தனர். இதனால் தேர்தல் அலுவலர்களிடையே குழப்பம் நிலவியது.

வாக்குவாதத்தால் பரபரப்பு

ஆசிரியர்களை காலையிலிருந்து அலைக்கழித்ததால், ஆத்திரமடைந்த கும்ப கோணம் பகுதி ஆசிரியர்கள், தேர்தல் நடத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், தேர்தல் பணியாற்றும் மையத்தின் ஆணையை எங்கு வாங்க வேண்டும் என உரிய தகவல்கள் இல்லையே என்று கேட்டனர். ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் வேறு வழியில்லாமல் காத்திருந்து ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் தேர்தல் பணியாற்றும் ஆணையை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்