பெஜாவர் மடாதிபதி மறைவு: பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் சமூக பணிகளை ஆற்றியவர் என புகழாரம்

பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-12-29 23:00 GMT
பெங்களூரு, 

பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் சமூக பணிகளை ஆற்றியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.

மறக்க முடியாதவை

உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் மறைவுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

உடுப்பி பெஜாவர் மடாதிபதி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களிலும், மனதிலும் தொடர்ந்து இருப்பார். மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்ந்தார். ஆன்மிகம், சமூக சேவையாற்றும் அதிகார மையமாக திகழ்ந்தார். இந்த சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அவர் தொடர்ந்து பணியாற்றினார். விஸ்வேசுவர தீர்த்த சுவாமியிடம் இருந்து கற்க பல்வேறு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. அதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சமீபத்தில் குரு பூர்ணிமா தினத்தன்று நான் அவரை சந்தித்த நிகழ்வு மறக்க முடியாதவை. அப்பழுக்கற்ற அறிவு திறனோடு திகழ்ந்தவர். இந்த துக்கமான தருணத்தில் அவரை பின் தொடர்பவர்களுடன் நான் இருக்கிறேன்.

இவ்வாறு மோடி தெரிவித்து உள்ளார்.

வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பெஜாவர் மடாதிபதி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துக்கமடைந்தேன். அஷ்ட மடங்களின் முதன்மை மடாதிபதியாக இருந்து, 5 முறை பர்யாய பூஜை செய்து வரலாறு படைத்தவர்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நற்சிந்தனைகளுக்கு ஆதாரமாக விளங்கிய முடிவில்லாதவராக திகழ்ந்தவர் விஸ்வேசுவர தீர்த்த சுவாமி. அவர் கற்பித்த பாடங்கள் மற்றும் எண்ணங்கள் எங்களை எப்போதும் தொடர்ந்து வழிநடத்தும். அவரிடம் ஆசி பெற்றவன் என்ற முறையில் நான் ஒரு அதிர்ஷ்டசாலி. அவரது மறைவு, ஆன்மிக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மறைவை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை பின்தொடர்பவர் களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்“ என்று தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா

முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமியின் மறைவின் மூலம், இந்து மதம், வழிகாட்டியை இழந்துவிட்டது. ஆன்மிக பணிகளுடன் சமூக பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். தலித்துகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அதன் மூலம் இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற குரல் கொடுத்தார். இந்து மதத்தை மேம்படுத்த அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. அயோத்தியில் ராமர்கோவில் கட்டுமானத்தை பார்வையிட அவர் இல்லாதது துக்கம் அளிக்கிறது“ என்றார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக பாடுபட்டவர், விஸ்வேசுவர தீர்த்த சுவாமி. அவரது சிந்தனைகள் நம் அனைவருக்கும் முன்மாதிரி. அவரது பக்தர்களுக்கு துக்கத்தை தாங்கும் சக்தியை இறைவன் வழங்கட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

சித்தராமையா

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில், “பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி மறைந்த செய்தி கேட்டு துக்கமடைந்தேன். ஆன்மிக, சமூக, கல்வி துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு செயலாற்றினார். இந்த சமூகத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். அவரது மறைவால் மேற்கண்ட துறைகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது இரங்கல் செய்தியில், “பெஜாவர் மடாதிபதியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால், பக்தர்கள் துக்கத்தில் உள்ளனர். இந்த சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வந்தார். அவரது இழப்பால், நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.

கோவிந்த் கார்ஜோள்

மேலும் கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி, துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுண் சவதி, அஸ்வத் நாராயண், மந்திரிகள் ஈசுவரப்பா, சுரேஷ்குமார், ஆர்.அசோக், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார், ஷோபா எம்.பி. உள்பட பலரும் பெஜாவர் மடாதிபதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்