காஞ்சீபுரத்தில் சுற்றி திரிந்த சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

காஞ்சீபுரத்தில் சுற்றி திரிந்த சிறுமிகள், போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் உள்ள காப்பகத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

Update: 2019-12-29 22:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பெரியார் நகர் பகுதியில் விஜயா (வயது 6), பச்சையம்மாள் (7) என்ற 2 சிறுமிகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் ஏட்டு யுவராஜ் அவர்களிடம் விசாரணை நடத்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரிக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் உள்ள காப்பகத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். மேலும் சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை சேர்ந்த அவர்கள் தங்கள் தாய் பழனியம்மாளிடம் கோபித்துக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு கிராமத்தில் உள்ள தாத்தா முனுசாமி வீட்டுக்கு செல்வதற்காக வந்துள்ளனர். வழியில் காஞ்சீபுரம் பெரியார் நகரில் இறங்கி சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.

சிறுமிகள் கொடுத்த தகவலின் பேரில் தாயார் பழனியம்மாள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு கிராமத்தில் உள்ள தாத்தா முனுசாமி ஆகியோர் வரவழைக்கப்பட்டு 2 சிறுமிகளும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் தங்களால் குழந்தைகளை படிக்க வைக்க வசதியில்லை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரியிடம் தெரிவித்தனர்.

இதையொட்டி 2 சிறுமிகளும் செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்