ஆய்வு பணிக்காக பாகூருக்கு வந்த கவர்னர் கிரண்பெடியை பொது மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

பாகூர் பழைய காலனிக்கு ஆய்வு பணிக்காக சென்ற கவர்னர் கிரண்பெடியை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Update: 2019-12-29 23:00 GMT
பாகூர்,

கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் பாகூர் பழைய காலனியில் உள்ள சமுதாய நலக்கூடம் பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளதாக கவர்னர் கிரண்பெடிக்கு புகார்கள் வந்தன.

அதைத் தொடர்ந்து கவர்னர் நேற்று பகல் 12 மணி அளவில் அந்த சமுதாய நலக் கூடத்தை ஆய்வு செய்வதற்காக பாகூருக்கு சென்றார். அவருடன் கவர்னர் மாளிகை அதிகாரிகளும் சென்றனர்.

அங்குள்ள சமுதாய நலக் கூடத்தை பார்வையிட்ட அவர் உரிய முறையில் பராமரிக்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், அந்த சமுதாய நலக்கூடத்தினை பராமரிக்கும் பொறுப்பினை, மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைக்க செய்தார்.

காத்திருந்த மக்கள்

இந்த நிலையில் கவர்னர் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் இலவச அரிசி, நூறு நாள் வேலைக்கு சம்பளம், பண்டிகை கால இலவச துணிகள், முதியோர்களுக்கு காலணிகள் வழங்கப்படாமல் இருப்பது குறித்து கவர்னரிடம் புகார் தெரிவிப்பதற்காக காத்திருந்தனர். ஆனால், கவர்னர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும், பொது மக்களை கவர்னரிடம் நெருங்கவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் கவர்னர் ஆய்வை முடித்து விட்டு உங்களிடம் வந்து பேசுவார், அதுவரை காத்திருங்கள் என கூறி நிறுத்தி வைத்திருந்தனர்.

முற்றுகையிட முயற்சி

ஆனால், ஆய்வை முடித்த கவர்னர் கிரண்பெடி அவருக்காக காத்திருந்த பொது மக்களை சந்திக்காமல் காரில் புறப்பட தயாரானார். அதனை அறிந்ததும் பொது மக்கள் கவர்னர் காரை வழி மறித்து முற்றுகையிட முயற்சித்தனர்.

ஆனால், கவர்னர் மாளிகை அதிகாரி பாஸ்கரன் பொது மக்களிடம் உங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி, கவர்னர் மாளிகைக்கு வந்து கொடுங்கள் என்றார்.

வாக்குவாதம் பரபரப்பு

அதற்கு பொது மக்கள் எங்களில் பல பேருக்கு எழுத படிக்க தெரியாது. நேரில் சந்தித்து குறைகளை கூற வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் ஏன் எங்களை தடுத்து நிறுத்துகிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே அங்கிருந்து புறப்பட்டு சென்ற கவர்னர் கிரண்பெடி பாகூரில் உள்ள கமலா நேரு திருமண மண்டபத்தின் அருகே உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். மீன் மார்க்கெட் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு, திருமண நிலையத்திற்கான வாகன நிறுத்தத்தை அமைப்பது குறித்தும், மீன் மார்கெட்டிற்கு வேறு இடத்தை தேர்வு செய்வது குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

கோரிக்கை

அப்போது, பாகூரில் உள்ள நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர். அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கவர்னர் கிரண்ெபடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார்.

இந்த ஆய்வின் போது, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், வட்டார வளர்ச்சி அதிகாரி மலர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்