மகன், மருமகனுக்கு வேலை வழங்கக்கோரி, கலெக்டர் காலில் விழ முயன்ற முதியவர் - மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

மகன், மருமகனுக்கு வேலை வழங்கக்கோரி கலெக்டர் காலில் முதியவர் விழ முயன்றதால் ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-30 22:15 GMT
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்‌ஷினி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 301 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், திமிரி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதற்கு ஆற்காடு வரை பஸ்சில் வந்து பின்னர் மற்றொரு பஸ்சில் ராணிப்பேட்டைக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே ராணிப்பேட்டைக்கு நேரடியாக வரும் வகையில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என மனு வழங்கப்பட்டது.

ரத்தினகிரி பகுதியை சேர்ந்த குறவர் சமூகத்தை சேர்ந்த சிவகுமார், ரத்தினகிரி, பாலமுருகன், ராஜா, உழைப்பாளி உள்பட 18 பேர் கொடுத்த மனுவில் ‘‘நாங்கள் வசித்து வந்த இடத்தை அகற்றப்பட்டதால், எங்களுக்கு ரத்தினகிரி மலையின் பின்புற பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

கலவையை சேர்ந்த நாராயணன், நசீர்அகமது, இப்ராகிம் ஆகியோர் அளித்த மனுவில், வாழைப்பந்தல் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது பல ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

போளிப்பாக்கம் ஊராட்சி கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் சார்பில் அளித்த மனுவில், காவேரிப்பாக்கத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் போளிப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை காவேரிப்பாக்கம் ஒன்றியத்திலிருந்து பிரித்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த போது திமிரியை அடுத்த வளையாத்தூர் காலனியை சேர்ந்த மணி என்ற முதியவர் பட்டதாரியான தனது மகன் ராஜ்குமார் (வயது 31) மற்றும் மாற்றுத்திறனாளியும், பட்டதாரியுமான தனது மருமகன் விநாயகம் (39) ஆகியோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மனு கொடுத்தார்.

நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறிய பின்னரும் மணி தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தியதால் அருகிலிருந்த போலீசார், மணியை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர். இதற்கு மணி எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

மனுக்கள் பெற்றுவிட்டு அரங்கில் இருந்து கலெக்டர் திவ்யதர்‌ஷினி வெளியே வந்தார். அப்போது படியில் அமர்ந்திருந்த மணியிடம், உங்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அப்போது திடீரென மணி கலெக்டரின் காலில் விழ முயன்றார். உடனடியாக கலெக்டர் அவரை தடுத்து மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்