திருப்பூரில் அதிரடி சோதனை: கஞ்சா கடத்திய 3 பேர் கைது - 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருப்பூரில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-12-31 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் கஞ்சா, குட்கா மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி துணை கமிஷனர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டு கல்யாணபாண்டி, போலீஸ்காரர்கள் ஜெய்பீம்ராஜ், வனிதாமுத்துசரம், கோமதி, பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளிமலையை சேர்ந்த மாயி(வயது 32), அவருடைய உறவினரான தேனி மாவட்டம் கீழக்கூடலூரை சேர்ந்த தமிழ்செல்வி(43), திருச்சி செல்லூரை சேர்ந்த ரோசிலின்(22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பெரிய மூட்டையில் கொண்டுவந்த 51 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறும்போது, தமிழ்செல்வியின் கணவரான முத்தையாவை கஞ்சா விற்பனை வழக்கில் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு கோவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவியை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதன்படி வாகன தணிக்கையில் தமிழ்செல்வி உள்ளிட்ட 3 பேர் சிக்கினர். இவர்கள் 3 பேரும் திருப்பூர்-காங்கேயம் ரோடு புதுப்பாளையத்தில் அறை எடுத்து தங்கி மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பொட்டலம் போட்டு விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தாரகிரிமலை பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி ரெயில் மூலம் திருப்பூர் கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்றனர்.

பின்னர் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயி, தமிழ்செல்வி, ரோசிலின் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை துணை கமிஷனர் பத்ரி நாராயணன் பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 2 மாதங்களில் மாநகரில் 26 கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டு 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 53 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டு 51 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மதிப்பு ரூ.20 லட்சமாகும்.

மாநகரில் 22 வாட்ஸ்-அப் குழுக்கள் பொதுமக்கள் உதவியோடு தொடங்கப்பட்டு தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை போலீசுக்கு தெரிவித்து வருகிறார்கள். இதுமிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது என்றார். 

மேலும் செய்திகள்