கூடலூரில், உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை

கூடலூரில் பலசரக்கு கடையில் ஆய்வு செய்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-31 22:30 GMT
கூடலூர், 

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பலசரக்கு கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில் கூடலூர் மெயின் பஜார் வீதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் தரமற்ற அரிசியை விற்பனை செய்வதாக உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சீவுக்கு புகார் வந்தது. அதன்பேரில் கூடலூர் மெயின் பஜார் வீதியில் உள்ள ஒரு பலசரக்கு கடைக்கு சென்று உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அந்த கடைக்கு சொந்தமான குடோனில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளில் இருந்து ½ கிலோ வீதம் 2 பைகளில் அரிசியை பரிசோதனைக்கு எடுத்தார். அதேபோல் தரமற்ற அரிசி குறித்து புகார் தெரிவித்தவரிடம் இருந்தும் தலா ½ கிலோ வீதம் 2 பைகளில் அரிசியை பரிசோதனைக்கு பெறப்பட்டது.

பலசரக்கு கடையில் உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்வது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் கூடலூர் பகுதியில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறி உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்