சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.

Update: 2019-12-31 22:30 GMT
சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

கொடியேற்றத்தையொட்டி இன்று காலை 6 மணிக்கு மாணிக்க வாசகர் பூஜையும், 9.15 மணிக்கு தாணுமாலயன் சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்குமண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார்.

கொடிப்பட்டம்

அதனை தொடர்ந்து பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடக்கிறது.

கொடியேற்றத்தையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேள-தாளத்துடன் முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக வந்து கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மக்கள்மார் சந்திப்பு

3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கற்பக விருட்‌‌சக வாகனத்தில் சாமி வீதி உலா வரும்போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய்- தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

8-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும், பேரம்பலம் திருக்கோவில் முன் நடராஜ பெருமாள் ஆனந்த திருநடன காட்சியும், காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் அ‌‌ஷ்டாபிஷேகம் நடக்கிறது.

தேர்ப்பவனி

9-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக வீதி உலா வருதலும், காலை 7.45 மணிக்கு தேர் வடம் தொட்டு இழுத்தலும் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இரவு 11 மணிக்கு ரி‌‌ஷப வாகனத்தில் சாமிவீதி உலா வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு தனது தாய்- தந்தையரை பிரிந்து செல்லும் சப்தாவர்ண காட்சியும் நடக்கிறது.

10-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், 5 மணிக்கு நடராஜ மூர்த்தி திருவீதி உலா வருதலும், அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆறாட்டு வைபவமும் நடக்கிறது.

திருவிழாவினையொட்டி தினமும் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, மெல்லிசை, பரத நாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்