கட்டண உயர்வால் பயணிகள் அவதி: திருச்சியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு ரெயில் கட்டண விவரம்

ரெயில் கட்டணம் உயர்வால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து முக்கிய ஊர்களுக்கான ெரயில் கட்டண விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-01-01 23:00 GMT
திருச்சி,

சாதாரண, எக்ஸ்பிரஸ், குளிர்சாதன ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவில் இருந்து அதிகபட்சமாக 4 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த கட்டண உயர்வால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா டிக்கெட், முன்பதிவில் தூங்கும் வசதி, குளிர்சாதன வசதி பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. இதில் ஏ.சி. பெட்டிகளின் டிக்கெட் கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதேபோல் முன்பதிவில்லா டிக்கெட்டின் கட்டணமும் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

பயணிகள் அவதி

கடந்த சில ஆண்டுகளாக ரெயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பதிலாக சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் குளிர்சாதன வசதி ரெயில்கள், சுவிதா அதிவிரைவு ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் சாதாரண ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணம் உயராததால் பெரும்பாலான பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டிருப்பது ஏழை, எளியவர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் அவதி அடைய செய்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

முன்பதிவில்லா டிக்கெட்

திருச்சியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குள் பழைய கட்டணம்):-

திருச்சியில் இருந்து சென்னை- ரூ.120(ரூ.115), மதுரை- ரூ.70(ரூ.65), நெல்லை-ரூ.115(ரூ.105), தூத்துக்குடி-ரூ.115(ரூ.105), கும்பகோணம்- ரூ.50(ரூ.45), மயிலாடுதுறை ரூ.60 (ரூ.55), ஈரோடு- ரூ.65(ரூ.60), கோவை- ரூ.95 (ரூ.90), எர்ணாகுளம்-ரூ.150(ரூ.140). பயணிகள் ரெயில்களில் கட்டண உயர்வு இல்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்