பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-01-01 22:15 GMT
பவானிசாகர், 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம் பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி நீலகிரி மலைப்பகுதியாகும். அணையில் 105 அடிக்கு தண்ணீரை தேக்க முடியும்.

தற்போது நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்ட காரணத்தாலும் பவானிசாகர் அணை நேற்று முன்தினம் இரவு கடந்த ஆண்டில் 3-வது முறையாக நிரப்பியது.

அணை நிரம்பியதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றின் வழியாக உபரி நீராக திறக்கப்படுகிறது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 1,107 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் 105 அடியாக இருந்தது அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் உபரி நீராக வினாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க அதிகரிக்க பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்