எருமப்பட்டி அருகே பஸ் மோதி டிரைவர் பலி உறவினர்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு

எருமப்பட்டி அருகே தனியார் பஸ் மோதி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-01-01 22:30 GMT
எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை 6 மணி அளவில் அலங்காநத்தம் பஸ்நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து எருமப்பட்டி நோக்கி 2 தனியார் பஸ்கள் ஒன்றை ஒன்று முந்தியவாறு சென்றன. இதில் ஒரு பஸ் கோவிந்தராஜ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆனால் அவர் மீது மோதிய பஸ் நிற்காமல் சென்று விட்டது.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் கோவிந்தராஜின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் திரண்டனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற தனியார் பஸ் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் பஸ் டிரைவரை கைது செய்யும் வரை கோவிந்தராஜின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல கூடாது என விபத்து நடந்த இடத்திலேயே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த எருமப்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் பஸ் டிரைவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறியதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த லாரி டிரைவர் கோவிந்தராஜூக்கு பிரியா என்ற மனைவியும் சவுமியா, மோனிகா என்ற 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்