கொடுமுடி அருகே துணிகரம்: அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கொடுமுடி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-01-02 23:00 GMT
கொடுமுடி,

கொடுமுடி அருகே கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள ஏமகண்டனூரை சேர்ந்தவர் சேகர். விவசாயி. அவருடைய மனைவி சகுந்தா (46). இவர் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். சேகரின் தோட்டம் ஊரையொட்டி உள்ளது. அங்கு தோட்ட வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதனால் சேகர் குடும்பத்துடன் கடந்த சில நாட்களாக தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சேகர் ஏமகண்டனூரில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்குள்ள பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த தோடு, மூக்குத்தி என ½ பவுன் நகையையும், 6 பட்டுப்புடவைகளையும், உண்டியலில் வைக்கப்பட்டு் இருந்த 2 ஆயிரத்து 500 ரூபாயையும் காணவில்லை.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, உண்டியலில் இருந்த பணம் மற்றும் பட்டுப்புடவைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பித்து சென்றது தெரியவந்தது.

இதேபோல் அதே பகுதியில் உள்ள சந்திரன் என்பவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரத்து 500-ஐ கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

மேலும் அருகே உள்ள அன்புநாதன் என்பவரது வீடு, சக்தி என்பவரது மளிகை கடை, அங்கன்வாடி மையத்திலும் மர்மநபர்கள் புகுந்து திருட முயன்றுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

இந்த 4 சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த கோணத்தில் கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொடுமுடி அருகே அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்