புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு: வேட்பாளர்கள்-முகவர்கள் மீது போலீசார் தடியடி

புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.

Update: 2020-01-02 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி, பொன்னமராவதி, திருமயம், திருவரங்குளம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. இதனால் புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு நின்று கொண்டிருந்தனர். இதனால் கல்லூரி முன்பு உள்ள சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தது.

போலீசார் தடியடி

இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் சிலர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், உள்ளே செல்ல முயன்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள், ஆதரவாளர்கள் மீது லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். பின்னர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தை தாண்டி தடுப்பு கட்டைகளை வைத்து, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள், ஆதரவாளர்கள் வருவதை தடுத்தனர். இதனால் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்